குடியாத்தம் அக், 28
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம் பரதராமி ஊராட்சியில் உள்ள பூசாரி வலசை கிராமம் மற்றும் இந்திரா நகர் பகுதியில் அடிக்கடி சாதி மோதல் ஏற்பட்டு இந்த மோதல் சம்பவம் தொடர்பாக பரதராமி காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த இரு கிராமங்களிலும் இதுபோன்ற மோதல் போக்குகள் தொடர்ந்து நடைபெறக் கூடாது என வலியுறுத்தி பரதராமி அடுத்த பூசாரி வலசை கிராமத்தில் காவல்துறையின் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவின் சார்பில் அனைத்து சமுதாய நல்லிணக்க விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் தலைமை தாங்கினார். குடியாத்தம் உதவி ஆட்சியர் வெங்கட்ராமன், குடியாத்தம் துணை காவல் கண்காணிப்பாளர் ராமமூர்த்தி, குடியாத்தம் தாசில்தார் விஜயகுமார், குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கார்த்திகேயன், சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த சமுதாய நல்லிணக்க விழிப்புணர்வு கூட்டத்தில் பரதராமி ஊராட்சி மன்ற தலைவர் கேசவேலு, ஒன்றிய குழு உறுப்பினர் இந்திராகாந்தி, கிராம நிர்வாக அலுவலர் சசிகுமார் உள்பட ஊர் முக்கிய பிரமுகர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், ஆசிரியர் பெரு மக்கள், காவல்துறை யினர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.