நெல்லை அக், 22
தீபஒளி திருநாளான தீபாவளி பண்டிகை வருகிற 24 ம்தேதி கொண்டாடப்படுகிறது.
தீபாவளி பண்டிகையையொட்டி புத்தாடைகள், பட்டாசுகள் வாங்க பொதுமக்கள் கடைவீதிகளில் அலைமோதி வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் கடந்த ஒருவாரமாக தீபாவளி விற்பனை சூடுபிடித்து உள்ளது. தீபாவளிக்கு இன்னும் 2 நாட்களே உள்ளதால் இன்று மாநகர பகுதியில் பொருட்கள் வாங்க கூட்டம் மேலும் அதிகரித்துள்ளது.
நெல்லை மாநகரப்பகுதியில் ஜவுளிக் கடைகளில் காலை 9 மணி முதல் நள்ளிரவு வரை அலை, அலையாய் மக்கள் கூட்டம் வந்த வண்ணம் உள்ளது.
அதிகளவு வியாபாரத்தால் பேருந்துகள், கார்கள், ஆட்டோக்கள் வரத்தும் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பல்வேறு சாலையில் நீண்ட தூரம் வாடிக்கை யாளர்களின் கார்கள் அணிவகுத்து போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக நெல்லை டவுன் ரதவீதிகள், வண்ணார்பேட்டை, பாளை, சமாதானபுரம் உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
தீபாவளி பண்டிகை யொட்டி நடைபெறும் வியாபார கூட்ட நெரிசலை பயன்படுத்தி சிலர் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மாநகர காவல் ஆணையர் அவினாஷ்குமார் உத்தரவின் பேரில் துணை ஆணையர்கள் சீனிவாசன், சரவணக்குமார் மேற்பார்வையில் உதவி ஆணையர்கள், ஆய்வாளர் தலைமையில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாநகர காவல் துறையினர் 1200 பேர் மற்றும் பட்டாலியன் காவல் துறையினர், ஊர்க்காவல்படையினர் 800 பேர் என மாநகர பகுதிகள் முழுவதும் 2 ஆயிரம் காவல் துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் டவுன் ரதவீதிகள், வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் மேம்பாலம், முருகன்குறிச்சி சாலை, பாளை சமாதானபுரம், மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் உயர்கோபுரம் அமைத்தும் காவல் துறையினர் கண்காணித்து வருகிறார்கள்.