வேலூர் அக், 19
வேலூரை அடுத்த ஒடுகத்தூரை சேர்ந்தவர் வினோத். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆன்லைனில் விமான டிக்கெட் புக் செய்தார். அப்போது அவரின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.11,585 எடுக்கப்பட்டது. ஆனால் டிக்கெட் புக் ஆகவில்லை. மேலும் அவரின் வங்கிக்கணக்கிற்கு பணம் திரும்ப வரவில்லை.
அதனால் அதிர்ச்சி அடைந்த வினோத் இதுகுறித்து வேலூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதேபோன்று வேலூரை அடுத்த சாத்துமதுரையை சேர்ந்த ஜெயமாலா என்பவரிடம் வேலூர் அப்துல்லாபுரம் விமான நிலையத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ.28,519, பலவன்சாத்துகுப்பம் பகுதியை சேர்ந்த ஐ.டி. ஊழியர் விஷால்ஆதித் செல்போன் எண்ணிற்கு பான் கார்டு இணைக்குமாறு வந்த இணைப்பை நம்பி, விவரங்கள் கொடுத்து ரூ.65 ஆயிரமும், வேலூர் வசந்தபுரத்தை சேர்ந்த பாண்டியன் ரூ.10 ஆயிரமும் இழந்தனர். இந்த மோசடி குறித்து காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனித்தனியாக புகார் அளித்தனர்.
இந்த 4 புகார்களின் பேரில் சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் அபர்ணா, துணை ஆய்வாளர் சதீஷ்குமார் ஆகியோர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். முதற்கட்டமாக 4 பேரின் வங்கிக்கணக்கில் இருந்து பணம் பரிமாற்றம் செய்யப்பட்ட வங்கிக்கணக்குகளை முடக்கினர். பின்னர் அவற்றில் இருந்து 4 பேரும் இழந்த ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்தை மீட்டனர்.