நெல்லை அக், 18
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி தாலுகா மலையன்குளம் ஊராட்சி மாதுடையார்குளம் கிராமத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஸ்மார்ட் ரேஷன் அட்டையுடன் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் தங்களின் ரேஷன் அட்டையை திரும்ப ஒப்படைக்க போவதாக கூறினர். அவர்களுடன் காவல் துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பின்னர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
மாதுடையாளர்குளத்தில் 240-க்கும் மேற்பட்ட ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர். ஆனால் எங்கள் பகுதியில் ரேஷன் கடைகள் இல்லை. இதனால் நாங்கள் பொருட்கள் வாங்க 6 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மலையன்குளத்திற்கு செல்ல வேண்டியுள்ளது.
மேலும் தினமும் வெகு தூரம் நடந்து சென்று பொருட்கள் வாங்க செல்வதால் சிரமமாக உள்ளது. எங்கள் பகுதியில் ரேஷன் கடை அமைக்க வலியுறுத்தி கடந்த ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலை புறக்கணித்தோம். அப்போது சேரன்மகாதேவி வட்டாச்சியர் நடத்திய பேச்சுவார்த்தையில் தற்காலிக ரேஷன் கடை அமைத்து தருவதாக உறுதியளித்தனர்.
அதன் பேரில் தற்காலிகமாக கடை அமைக்க எங்கள் கிராமத்தில் ஒரு இடத்தை ஒதுக்கி கொடுத்தோம். ஆனால் இதுவரை எங்கள் பகுதியில் ரேஷன் கடை அமைத்து தரவில்லை. உடனடியாக எங்கள் பகுதியில் ரேஷன் கடை அமைத்து தரவேண்டும் என அதில் கோரிக்கை விடுத்துள்ளனர்.