Spread the love

சென்னை அக், 18

இனி வருங்காலங்களில் தமிழ்வழி கல்வியில் படித்தமைக்கான ஆதார சான்றிதழை நேரடியாக பள்ளிகளில் வாங்க முடியாது என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. அருகாமையில் உள்ள இ – சேவை மையங்களின் மூலமாக சான்றிதழ் வேண்டுபவர்கள் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வியில் பொதுமக்களும், பள்ளி மாணவர்களும் தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழை(PSTM ) இ-சேவை மூலமாக விண்ணப்பிக்கும் முறையை பள்ளிக்கல்வித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

PSTM -PERSON STUDIED IN TAMIL MEDIUM என்று சொல்லக் கூடிய சான்றிதழான தமிழ் வழி கல்வி கற்றமைக்கான ஆதார சான்றிதழ் தற்போது அரசுப்பணிகள் உட்பட கல்லூரி அட்மிஷன்கள் வரை இடஒதுக்கீட்டிற்காக கேட்கப்படுகிறது.

மேலும், ஒட்டுமொத்த பள்ளிக்கல்வியை தமிழ் வழியிலேயே முடித்த மாணவர்களுக்கு உயர்கல்வி படிப்பதற்கான உதவித்தொகை உட்பட வழங்கப்பட்டு வருகிறது.

இத்தனை நாட்களாக இந்த சான்றிதழை பெற வேண்டுமென்றால் பொதுமக்களும் மாணவர்களும் நேரடியாக அவர்கள் படித்த பள்ளிகளுக்கு சென்று தலைமை ஆசிரியரிடம் உரிய ஆவணங்களை காட்டி சரிபார்த்து அவர் கையெழுத்திட்ட சான்றிதழ் வழங்கப்படும்.

ஆனால், பள்ளிக் கல்வித்துறையின் புதிய அறிவிப்பின்படி இனி நேரடியாக கையால் பூர்த்தி செய்த சான்றிதழை தலைமை ஆசிரியர்கள் வழங்கக் கூடாது. இ-சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்க படும் விண்ணப்பங்கள் பள்ளிக்கல்வி மாநில மாநிலத்திட்ட இயக்ககத்திலிருந்து மின்னஞ்சல் வாயிலாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்படும்.

இதை பெற்றுக்கொண்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உடனடியாக சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியருக்கு விண்ணப்பத்தை அனுப்பி வைக்க வேண்டும். இந்த விண்ணப்பங்கள் ஆசிரியர்கள் பயன்படுத்தும் EMIS தளத்தில் காணப்படும்.

தலைமை ஆசிரியரும் காலம் தாழ்த்தாமல் பதிவேடுகளை சரிபார்த்து விண்ணப்பதாரர் சரியான தகவலை கொடுத்திருக்கிறாரா என்பதை உறுதி செய்து இ-கையெழுத்திட்டு அந்த சான்றிதழை மீண்டும் அதற்கான செயலியில் பதிவேற்றம் செய்து விடுவார். விண்ணப்பதாரர் கொடுத்துள்ள தகவல்கள் தவறாக இருக்கும்பட்சத்தில் விண்ணப்பத்தை நிராகரிக்கவும் தலைமை ஆசிரியருக்கு உரிமையுண்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *