கடலூர் அக், 16
மந்தாரக்குப்பம், கங்கைகொண்டான் பேரூராட்சிக்குட்பட்ட எஸ்.பி.டி.எஸ். நகர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் வளாகத்தில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மூலம் அருகில் உள்ள எஸ்.பி.டி.எஸ். நகர், கீழகுப்பம், எம்.ஜி.ஆர். நகர், மேல்பாதி கிராமத்திற்கு செல்லும் சாலையில் அமைந்திருக்கும் குடியிருப்புகளில் உள்ள 500க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொட்டியை அதிகாரிகள் முறையாக பராமரிக்காததால், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அதன் உறுதி தன்மையை இழந்து எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.
மேலும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் வெளிப்புறத்தில் தொடர்ந்து நீர் கசிவு ஏற்பட்டு வருகிறது. இதனால் தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. பொதுமக்கள் கோரிக்கை இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் அருகே ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளதால் இங்கு வரும் பொதுமக்கள் தொட்டியின் கீழ் நிற்கின்றனர். அவ்வாறு நிற்கும்போது, திடீரென மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழுந்தால் உயிர்ச்சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எனவே ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படும் முன் இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்றிவிட்டு புதிதாக அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.