Spread the love

நெல்லை அக், 14

சாம்பாரில் தொடங்கி பொரியல், அவியல், ஆம்லெட், பிரியாணி என சமையலில் வெங்காயம் தவிர்க்க முடியாத உணவு பொருளாக இருந்து வருகிறது.

அதேசமயம் வெங்காயம் உற்பத்தி என்பது குறைந்து வருகிறது. எனவே வரத்தை பொறுத்து வெங்காய விலை அவ்வப்போது ஏறி இறங்கி வருகிறது. நெல்லை மார்க்கெட்டுகளுக்கு வழக்கமாக தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம், ஆலங்குளம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து பெரிய வெங்காயம், சாம்பார் வெங்காயம் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.

ஆனால் கடந்த சில நாட்களாக வரத்து இல்லாததால் மிகக் குறைந்த அளவே வருகிறது. இதனால் திண்டுக்கல் உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து வெங்காயம் கொண்டு வரப்படுகிறது. சில வாரங்களுக்கு முன்பு வரை சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயம் அதிகளவு உற்பத்தியானதால் விலை குறைந்து காணப்பட்டது.

குறிப்பாக பெரிய வெங்காயம் 5 கிலோ ரூ. 100 என வியாபாரிகள் கூவி கூவி விற்கும் அளவுக்கு விலை குறைந்திருந்தது. அதேபோல் சின்ன வெங்காயமும் ரூ. 30 முதல் ரூ. 40 ஆக இருந்து வந்தது.

இந்நிலையில் நெல்லை பாளையங்கோட்டை மார்க்கெட்டில் சின்ன வெங்காய விலை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து உயர்ந்து வந்தது. 2 நாட்களுக்கு முன்பு ரூ. 40-க்கு விற்கப்பட்டது. நேற்று முன்தினம் ரூ. 67-க்கும், நேற்று ரூ. 75-க்கும் விற்பனை செய்யப்பட்டது.இந்நிலையில் இன்று ஒரு கிலோ ரூ. 100 வரை விற்கப்படுகிறது. இதேபோல் டவுன், தச்சநல்லூர் உள்ளிட்ட நெல்லை மாநகர மற்றும் மாவட்ட பகுதியில் வெங்காயத்தின் விலை ரூ. 100- ஐ தொட்டு உள்ளது. இந்த விலை உயர்வை கேட்டு இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *