கோயம்புத்தூர் அக், 13
தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வருகிற 24 ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில் தற்போது கடைகளில் இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மேலும் விற்பனையும் இப்போதே தொடங்கி விட்டது. இனிப்பு, காரம் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்களுக்கு உணவு பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சமீரன் அறிவுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- இயற்கை வண்ணங்கள் இனிப்பு, காரம் தயாரிக்கும் சமையலறையில் போதுமான உறிஞ்சும் அமைப்புடன் கூடிய புகை போக்கி மற்றும் முறையான கழிவுநீர் வடிகால் அமைப்பு வேண்டும். உணவு பொருள் தயாரிப்பு வளாகத்தினுள் ஈக்கள், பூச்சிகள் புகாத வகையில் தடையமைப்பு மற்றும் பூச்சி கட்டுப்பாடு முறைகள் செயல்படுத்த வேண்டும். உணவு தயாரிப்புக்கு பொட்டலமிடப்பட்ட எண்ணை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
மேலும் உணவு தயாரிப்பின்போது சமையல் எண்ணெயை அதிகபட்சமாக ஒருமுறை மட்டுமே சூடாக்கப்பட வேண்டும். சூடேற்றப்பட்ட எண்ணெயில் மேலும் புதிய எண்ணெய் சேர்த்து மீண்டும் மீண்டும் சூடேற்றி சமையலுக்கு பயன்படுத்த கூடாது. இனிப்பு கார வகைகள் தயாரிப்பில் இயற்கை வண்ணங்கள் சேர்க்கப்படலாம். அனுமதிக்கப்படாத நிறமூட்டிகள் சேர்க்க கூடாது. மேலும் அனுமதிக்கப்பட்ட வண்ணங்கள் குறிப்பிட்ட அளவை மீறக்கூடாது என தெரிவித்துள்ளார்.