சென்னை அக், 8
தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட அவசர தடைச் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். அதன் மூலம், ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக விளம்பரம் செய்யவும், அந்த நிறுவனங்களுக்கு வங்கிகள் பணப் பரிவர்த்தனை செய்யவும் தடை விதிக்கப்படுகிறது.
மேலும் பல்வேறு தரவுகளின் அடிப்படையில், ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதுபோன்ற ஆன்லைன் சூதாட்டங்கள் மற்றும் விளையாட்டுகள், தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இயங்குவதால், ஏற்கெனவே உள்ள விதிகள் மற்றும் சட்டங்களைக் கொண்டு இவற்றைக் கட்டுப்படுத்த முடியாது. எனவே, புதிய சட்டம் இயற்ற அரசு முடிவுசெய்தது.
அதன்படி, தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குபடுத்துதல் அவசர சட்ட மசோதா-2022-ஐ உருவாக்கியது. அதற்கு கடந்த மாதம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த அவசர சட்டத்துக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த அவசரச் சட்டம் வரும் 17ம் தேதி தொடங்கும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் முழுமையான சட்ட வடிவம் பெற உள்ளது. முன்னதாக, இந்த அவசரச் சட்டம் அரசிதழிலும் வெளியிடப்பட்டது. இந்த சட்டப்படி, தமிழகத்தில் பணத்தையோ அல்லது வேறு ஏதேனும் பொருளையோ வைத்து, ஆன்லைன் மூலம் நடைபெறும் சூதாட்டங்கள் மற்றும் விளையாட்டுகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.
அதேபோல, ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக விளம்பரம் செய்தால் ஓராண்டு வரை சிறை அல்லது ரூ.5 லட்சம் வரை அபராதம் அல்லது இவை இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.
இதுபோன்ற சூதாட்டங்களில் ஏற்கெனவே தண்டனை பெற்றவர்கள், அடுத்தடுத்து தண்டனை பெறும்போது ஓராண்டுக்குக் குறையாமல், 3 ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத் தண்டனை அல்லது ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை அபராதம் அல்லது இவை இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.