நெல்லை அக், 5
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியை சேர்ந்தவர் அந்தோணி சவரிமுத்து. இவர் சீவலப்பேரி பகுதியில் உள்ள பர்னிச்சர் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
இவர் தினமும் வசூலுக்காக செல்வது வழக்கம். இன்று கடைக்கு வந்த அவர் பின்னர் மோட்டார் சைக்கிளில் வசூல் செய்ய சென்றார். பாளை கீழ நத்தம் விலக்கு பகுதியில் 4 வழிச்சாலையில் சென்ற போது , எதிரே நாகர்கோவிலில் இருந்து மதுரை நோக்கி சென்ற கார் இவரது மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்ட அந்தோணி சவரிமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் மோதிய வேகத்தில் கட்டுப்பாட்டை இழந்து பேரிகார்டு மீது மோதி நின்றது. விபத்து குறித்து தகவல் அறிந்ததும் பாளை போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்து நடந்த பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் நடைபெற்று உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும், இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.