அரியலூர் அக், 2
அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் அருகே மாளிகைமேடு பகுதியில் தமிழக அரசு தொல்லியல் துறையின் சார்பில் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி நடந்து வந்தது. இந்த அகழாய்வு பணியின்போது கடந்த மார்ச் மாதம் 4 ம் தேதி பழங்கால தங்கக்காப்பு கண்டெடுக்கப்பட்டது.இதனைதொடர்ந்து நடைபெற்ற அகழாய்வு பணியின்போது கடந்த மார்ச் மாதம் பழங்கால மண்பானை, மண்ணாலான கெண்டி செம்பின் மூக்குப்பகுதி ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவையனைத்தும் எத்தனை ஆண்டுகள் பழமையானவை என்பது ஆய்வுக்கு பின்னரே தெரியவரும் என்று தொல்லியல்துறை அதிகாரிகள் தெரிவித்த நிலையில், தொடர்ந்து நடைபெற்று வரும் ஆராய்ச்சி பணியின் போது கடந்த செப்டம்பர் மாதம் யானை தந்தத்தாலான மனித உருவம் இடுப்பிற்கு கீழே உள்ள பகுதி கண்டெடுக்கப்பட்டன. இதுவரை இந்த அகழ்வாராய்ச்சி பணியில் கிடைத்த பழங்கால பொருட்களில் சீன மண்பாண்டங்கள், செப்பு நாணயங்கள் மற்றும் செம்பு பொருட்கள், இரும்பு ஆணிகள், கண்ணாடி மணிகள் மற்றும் வளையல்கள், அலங்கரிக்கப்பட்ட கற்கள் ஆகியவையும் அடங்கும்.இந்த அகழாய்வு பணியானது பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டு நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதையடுத்து, தோண்டும் பணி நிறுத்தி வைக்கப்பட்டு தொடர்ந்து ஆவணப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேற்கண்ட அகழாய்வின்போது கிடைக்கப்பெற்ற பொருட்கள் அனைத்தையும் பொதுமக்கள் பார்வைக்கு வைத்தால் சிறப்பாக இருக்கும் எனவும், தற்போது தோண்டப்பட்டுள்ள பகுதிகள் தார்பாய்களைக் கொண்டு மூடப்பட்டு சுற்றி மணல்கள் கொட்டி வைக்கப்படுகின்றன. எதிர்வரும் மழைக்காலங்களில் தார்பாய்கள் பாதுகாப்பாக இருக்காது எனவும், அடுத்தக்கட்ட அகழ்வாராய்ச்சி பணி தொடங்குவதற்கு முன் தற்போது தோண்டப்பட்ட பகுதிகளில் மேற்கூரைகளை அமைத்து பாதுகாக்கப்பட்டால் இதுவரை செய்த பணிகள் வீணாகாமல் இருக்கும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.