Spread the love

விழுப்புரம் செப், 29

விழுப்புரம் நகராட்சியில் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளான பானாம்பட்டு, ராகவன்பேட்டை, பாண்டியன் நகர், கிருஷ்ணா நகர், இந்திரா நகர், கம்பன் நகர், கணேஷ் நகர், எம்.டி.ஜி. நகர், காந்தி நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தமிழ்நாடு நகர்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.7½ கோடி மதிப்பில் சாலைப்பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு இன்று மாலை 3.30 மணியளவில் விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்தப்புள்ளி திறக்கப்படும் என்றும், தகுதிவாய்ந்த ஒப்பந்ததாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதையொட்டி அதிமுகவை சேர்ந்த ஒப்பந்ததாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்து அதற்கான காசோலையை தபால் மூலம் ஒப்படைப்பதற்காக நகராட்சி அலுவலகத்திற்கு வந்தனர்.

ஆனால் இதனைப் பெற நகராட்சி ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் யாரும் அங்கு இல்லை. அங்கிருந்த ஊழியர்களும், இதனை வாங்க மறுத்துவிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த அதிமுக.வினர் நகர செயலாளர்கள் பசுபதி, ராமதாஸ் ஆகியோர் தலைமையில் நகராட்சி அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் நகர துணை செயலாளர் வக்கீல் செந்தில், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் செங்குட்டுவன், நகரமன்ற நகர் மன்ற தலைவர்கள் கோல்டுசேகர், கலை, பத்மாபாஸ்கர், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நகரமன்ற உறுப்பினர் சுரேஷ்ராம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *