நெல்லை செப், 29
நெல்லை மாநகரப் பகுதியில் அரசு சுவர்கள் மற்றும் பொது இடங்களில் அரசியல் பிரமுகர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப் பட்டு வருகிறது. இது போன்ற போஸ்டர்கள் ஒட்டுவதாலும் ஆங்காங்கே போக்குவரத்து மிகுந்த இடங்களில் பேனர்கள் வைப்பதாலும் வாகன ஓட்டிகளின் கவனம் சிதறி விபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகி விடுவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்து வந்தனர்.
இதையடுத்து பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை கிழித்து சுத்தப்படுத்துமாறு மாநகராட்சி ஆணையர் சிவ கிருஷ்ணமூர்த்தி உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் உதவி ஆணையர் வெங்கட்ராமன் அறிவுறுத்தலின் பேரில் தச்சை மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் பொது சுவர்கள் மற்றும் கண்ட கண்ட இடங்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையிலான குழுவினர் அப்புறப்படுத்தி வருகின்றனர்.
மேலும் ஒருபுறம் சாலையின் தடுப்பு சுவர்கள் மற்றும் சென்டர் மீடியன்களில் ஒட்டப்படும் போஸ்டர்கள் கிழிக்கப்பட்டு வரும் நிலையில் சமீபத்தில் லட்சக்கணக்கில் பணம் செலவு செய்து புதுப்பிக்கப்பட்ட வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் மேம்பாலத்திலும் அரசியல் கட்சியினர் போஸ்டர்கள், பேனர்கள் ஒட்டி வந்தனர். அதனையும் கடந்த சில நாட்களாக தூய்மை பணியாளர்கள் கிழித்து சுத்தப்படுத்தி வருகின்றனர்.
மேற்கொண்டு இதேபோல் அரசியல் கட்சியினர் பொது சுவர்களில் போஸ்டர்கள் ஒட்டாமல் இருப்பதற்கு மாநகராட்சி நிர்வாகம் நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குற்றவியல் ரீதியிலான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இந்த நிலை மாறும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.