புதுச்சேரி செப், 28
புதுவை மரப்பாலம் சந்திப்பில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்க அங்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான திட்ட அறிக்கையை தயாரிக்க இந்திய அரசின் சார்பு நிறுவனமான தேசிய கட்டிட கட்டுமான நிறுவனத்திடம் பணி ஒப்படைக்கப்பட்டது. இந்த நிறுவனத்தினர் மரப்பாலம் சந்திப்பில் வரும் வாகனங்கள், அவை சுமந்து வரும் சுமைகளின் எடை ஆகியவை குறித்து ஒரு வார காலம் ஆய்வு நடத்தினர்.
இதைத்தொடர்ந்து மரப்பாலம் அமைக்க மாதிரி வரைபடம் தயாரித்தனர். இதற்காக ரூ.58 கோடி செலவு ஆகும் என்று உத்தேச மதிப்பீடு தயார் செய்தனர். இது தொடர்பாக அந்த நிறுவனத்தினர் இன்று முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து மாதிரி வரைபடம் மூலம் விளக்கம் அளித்தனர். அப்போது அமைச்சர் லட்சுமிநாராயணன், சட்ட மன்ற உறுப்பினர் சம்பத், ஸ்மார்ட் சிட்டி திட்ட தலைமை செயல் அதிகாரி அருண், அரசு செயலாளர் உதயகுமார், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, ஸ்மார்ட் சிட்டி திட்ட பொதுமேலாளர் சீனு.திருஞானம் ஆகியோர் உடனிருந்தனர்.