தென்காசி செப், 27
தென்காசி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயினுலாப்தீன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முத்துமாதவன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலர் கந்தசாமி, உதவி ஆணையர் ராஜ மனோகரன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் கூட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள், பட்டா மாறுதல், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 357 மனுக்களை பொதுமக்கள் கொடுத்தனர். இந்த மனுக்களின் மீது பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தலைமை தாங்கினார். மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிக்கு ரூ.85 ஆயிரம் மதிப்பிலான இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் என மொத்தம் ரூ.5. லட்சத்து 61 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.