செங்கல்பட்டு செப், 27
உலக சுற்றுலா தினம் 27 ம்தேதி இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு மாமல்லபுரம் சுற்றுலாத்துறை சார்பில் 4 நாட்கள் விழாவாக பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி, படகுப்போட்டி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காட்டில் மாமல்லபுரம் சுற்றுலாத்துறை சார்பில் அங்குள்ள படகு குழாமில் சுற்றுலா பயணிகளுக்கு படகு போட்டி நடத்தப்பட்டது.இப்போட்டியை மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் எஸ்.சக்திவேல் கொடியசைத்து தொடங்கி வைத்தார். படகு போட்டி சுற்றுலா தின விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தனி நபர் இயக்கும் படகு, 2 பேர் பங்கேற்கும் படகு என நடத்தப்பட்ட படகு போட்டியில் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்று ஆர்ப்பரிக்கும் கடல் நீர் மற்றும் பக்கிங்காம் கால்வாய் நீர் இடையே எந்தவித பயமும் இன்றி துடுப்பு மூலம் படகு ஓட்டி அசத்தினர்.