தர்மபுரி செப், 26
விடுமுறை நாளையொட்டி ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் பரிசலில் சென்று மகிழ்ந்தனர். நீர்வரத்து குறைந்தது தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு கர்நாடகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். அவர்கள் அருவியல் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்வார்கள்.
இதனிடையே காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கியது. இந்தநிலையில் நேற்று ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்தை காவிரி நுழைவிடமான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்ததால் பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதால் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.