சென்னை செப், 24
தமிழ் திரையுலகில் புகழ் பெற்ற டைரக்டராக இருந்த பாரதிராஜா இப்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அவருக்கு 81 வயதாகிறது.
கடந்த மாதம் பாரதிராஜாவுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு தியாகராய நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அஜீரண கோளாறு, நீர்ச்சத்து குறைபாடு, நுரையீரலில் சளி போன்ற பிரச்சினைகள் இருந்தன. இதற்காக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சைக்கு பின் உடல்நலம் தேறி வீடு திரும்பினார்.
இந்த நிலையில் பாரதிராஜாவுக்கு இப்போது மீண்டும் உடல்நல குறைவு ஏற்பட்டு உள்ளது. காய்ச்சலும் இருந்தது. இதையடுத்து அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.