தர்மபுரி செப், 21
கேந்திரிய வித்யாலயா பள்ளி தர்மபுரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட செட்டிக்கரை ஊராட்சி குரும்பட்டியில் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் மாவட்ட ஆட்சியர் சாந்தி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பள்ளியின் அடிப்படை வசதிகள் குறித்தும், மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் முதல்வர் ஜெயச்சந்திரன் மற்றும் ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார். கல்வி கற்பதற்காக இந்த பள்ளியில் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி கற்பிக்கும் முறைகள் குறித்தும் ஆய்வு செய்தார். பின்னர் மாணவ, மாணவிகளிடம் கலந்துரையாடினார். மாணவ, மாணவிகளின் எதிர்காலம் கருதி, நன்கு கற்கும் அளவிற்கு பயிற்சியுடன் கல்வியை சிறப்பாக அளிக்க வேண்டும் என ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து தர்மபுரி நகராட்சி, மதிகோன்பாளையத்தில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் மாவட்ட ஆட்சியர் சாந்தி ஆய்வு செய்தார். முகாமில் தங்கியுள்ள அனைவருக்கும் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் முழுமையாக ஏற்படுத்தப்பட்டுள்ளதா? என்பதை நேரில் பார்வையிட்டு, குறைகளை கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது தர்மபுரி தாசில்தார் ராஜராஜன், ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் கணேசன் உள்பட தொடர்புடைய அலுவலர்கள் உடன் இருந்தனர்.