நெல்லை செப், 15
நெல்லை மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை, கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக பல்வேறு இடங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டு உள்ளது. இதனால் மாநகராட்சியின் பெரும்பாலான வார்டுக்குட்பட்ட பகுதிகளில் சாலைகள் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது.
இதில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கிடையே பயணிக்கின்றனர். இதனை சீரமைக்க கோரி பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் பாளை கே.டி.சி.நகர் மங்கம்மாள் சாலைக்குட்பட்ட பகுதியில் நேற்று மாலை பெய்த திடீர் மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. இதனை சீரமைக்க கோரி 37-வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்த வக்கீல் அன்புஅங்கப்பன் என்பவர் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டார்.
மேலும் அந்த சாலை வழியாக மோட்டார் சைக்கிள், கார் வழியாக வந்த பயணிகளிடம் இந்த சாலையில் பயணித்து வந்ததற்கு வாழ்த்துக்கள் என கூறி அவர்களுக்கு இனிப்பு வழங்கினார்.