மதுரை செப், 14
நெல்லை மாவட்டம் ராஜவல்லிபுரத்தை சேர்ந்த ஆறுமுகம், மதுரை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது,
ராஜவல்லிபுரம் பாஜக. தலைவராக உள்ளேன். பிரதமர் மோடி பிறந்தநாள் விழா வருகிற 17 ம்தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு எங்களது கிராமத்தில் கிராமிய கலை நிகழ்ச்சிகள், மாட்டு வண்டி பந்தயம், குதிரை வண்டி பந்தயம் ஆகியவை நடத்த முடிவு செய்துள்ளோம். இதற்கு உரிய அனுமதியும், பாதுகாப்பும் கேட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் விண்ணப்பித்து உள்ளோம். இதுவரை அனுமதிக்கவில்லை. எனவே பிரதமரின் பிறந்தநாள் விழாவையொட்டி கொண்டாட்டத்திற்கு உரிய பாதுகாப்பை காவல் துறையினர் வழங்க உத்தரவிட வேண்டும் அந்த மனுவில் கூறியிருந்தார்.
இதற்கு நீதிபதிகள், சட்டம் என்பது அனைவருக்கும் சமமானது தான். அதில் பாரபட்சம் கூடாது. பிறந்தநாள் நிகழ்ச்சி என்றால் நலத்திட்டங்கள் வழங்கலாம். இனிப்பு வழங்கலாம். ஆனால் மாட்டு வண்டி போட்டி தான் நடத்த வேண்டும் என்பது கிடையாது. ஏற்கனவே இதுபோன்ற போட்டிகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்து உள்ளது என்றனர். மேலும் இந்த வழக்கு குறித்து நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பதில் அளிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.