Spread the love

நெல்லை செப், 13

நெல்லை மாவட்டம் பருத்திபாடு நடுத்தெருவை சேர்ந்தவர் மகாராஜன். இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது மனைவி மற்றும் மகளுடன் நெல்லை ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது,

எனக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். மகன் என்ஜினீயரிங் படித்து வருகிறான். மூத்த மகள் ஆசிரியர் பயிற்சி படித்து வருகிறார். எனது 2-வது மகள் நல்லத்தாய் மூலைக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகிறாள். கடந்த மார்ச் மாதம் அவளது பள்ளியில் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. எனது மகள் தடுப்பூசி செலுத்த விருப்பமில்லை என கூறிய நிலையிலும், 10-ம் வகுப்பு தேர்வு எழுத தடுப்பூசி கட்டாயம் எனக்கூறி ஆசிரியர்கள் அவளை கட்டாயப்படுத்தி தடுப்பூசி செலுத்திக்கொள்ள செய்துள்ளனர்.

அதன்பின்னர் எனது மகளுக்கு வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட பக்க விளைவுகளால் எனது மகள் அடையாளம் தெரியாத நிலையில் ஆபத்தான கட்டத்திற்கு போய்விட்டாள்.

இதைத்தொடர்ந்து பல்வேறு தனியார் மருத்துவமனையில் நல்லத்தாய்க்கு சிகிச்சை அளித்தோம். ஆனாலும் குணமாகவில்லை. ஒரு கட்டத்தில் என்னிடம் பணம் இல்லாததால், நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தேன். அங்கு கடந்த ஜூன் மாதம் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மூளையில் காசநோய் பாதிப்பு உள்ளதாக தெரிவித்தனர். உடனே ஜூலை மாதம் அவளுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பின்னர் சற்று உடல்நிலை தேறிய நிலையில், தற்போது மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சுயநினைவு இழந்துவிட்டார்.

கடந்த 3 மாதங்களாக நெல்லை அரசு மருத்துவமனையில் தங்கி இருந்து மகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறோம். எங்களுக்கு சிகிச்சை அளிக்க போதுமான வசதிகள் இல்லை. எனவே நல்லத்தாய்க்கு உயர்தர சிகிச்சை அளிக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறியிருந்தார்.

இதுதொடர்பாக மருத்துவக்கல்லூரி டீன் மருத்துவர் ரவிச்சந்திரன் கூறுகையில், மாணவிக்கு டியூபர்குளோசிஸ் மெனிங்க்டிஸ் என்ற ஒரு வகை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது சிறுவயதில் இருந்தே மாணவிக்கு இருந்திருக்க வேண்டும். தடுப்பூசி செலுத்தியதால் இதுபோன்ற பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை. சமீபத்தில் மாணவியின் உடலில் ரத்தம் சீராக செல்ல மூளையில் இருந்து இதயத்திற்கு ஸ்டெண்ட் வைத்தோம். அதன்பின்னர் மாணவி உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. தற்போது அது சரிவர வேலை செய்யவில்லை என்பதால் மீண்டும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவும் எங்களிடம் பேசினார். எங்களுடைய முழு முயற்சியையும் செலுத்தி மாணவிக்கு சிகிச்சை அளித்து வருகிறோம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *