நெல்லை செப், 13
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள மலையடிபுதூர் ஊருக்கு மேற்கே தாதாபறையில் மாவடியை சேர்ந்த விவசாயிகள் முத்துகிருஷ்ணன், இளையபெருமாள், செந்தில்சாமி ஆகியோருக்கு சொந்தமான விளை நிலங்கள் உள்ளன.
இதில் வாழை, நெல் பயிர் செய்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன் தினம் இரவில் விளைநிலங்களுக்குள் புகுந்த காட்டு பன்றிகள் 50க்கும் மேற்பட்ட வாழைகளை நாசம் செய்துள்ளன. வாழைகளை குதறி பிடுங்கி குருத்துகளை தின்று சேதப்படுத்தியுள்ளன. இவைகள் 4 மாதமே ஆன ஏத்தன் ரக வாழைகள் ஆகும். இதனால் விவசாயிகளுக்கு பல லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. சமீபகாலமாக இப்பகுதியில் காட்டு பன்றிகள் அட்டகாசம் அதிகரித்து வருவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
மேலும் வனப்பகுதியில் இருந்து இடம் பெயர்ந்து வந்த காட்டு பன்றிகள் மீண்டும் வனப்பகுதிக்குள் செல்லாமல், மலையடிவாரத்தில் உள்ள புதர்களில் தஞ்சமடைந்துள்ளதாகவும், அவைகள் இரவு நேரங்களில் விளைநிலங்களை நாசம் செய்து வருவதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர்.
மேலும் விளைநிலங்களுக்குள் உலா வரும் பன்றிகளால் விவசாயிகளின் உயிருக்கும் ஆபத்து நிலவுவதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர். எனவே காட்டு பன்றிகளை விரட்டவும், நாசமான வாழைகளுக்கு இழப்பீடு வழங்கவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் பெரும்படையார் கூறியதாவது,
களக்காடு மலையடி வாரத்தில் வனவிலங்குகளால் பேரழிவு ஏற்பட்டு வருகிறது. வனவிலங்குகள் நாசம் செய்யும் பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும், வனத்துறையினர் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்காமல் அலட்சியத்துடன் செயல்பட்டு வருகின்றனர். எனவே மாவட்ட ஆட்சியர் இதில் தலையிட்டு விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என அவர் கூறினார்.