திண்டுக்கல் செப், 13
கொடைக்கானல் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால், கொடைக்கானல்-பழனி மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் அந்த பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மண்சரிவை சரிசெய்யும் பணிகள் தொடங்கப்பட்டது. மேலும் அந்த பாதையில் சிறிய ரக வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டு வருகிறது. பேருந்து உள்பட கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அந்த பாதையில் உள்ள பி.எல்.செட், வடகவுஞ்சி, கோம்பைக்காடு, பேத்துப்பாறை, கும்பூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள், பெருமாள்மலை மற்றும் கொடைக்கானலில் உள்ள பள்ளிகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களது கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
எனவே மழை குறைந்துள்ள நிலையில் மாணவ-மாணவிகளின் நலன்கருதி கொடைக்கானல்-பழனி மலைப்பாதையில் சிறிய ரக அரசு பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.