இடுக்கி செப், 12
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் நேரியமங்கலம் என்ற இடத்தில் கேரள அரசுப்பேருந்து ஒன்று எதிர்பாராதவிதமாக 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 58க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தரப்பில் கூறுகையில், விபத்தில் சிக்கிய மற்றொரு நபரும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகத் தெரிகிறது. விபத்துக்கான காரணத்தை நாங்கள் இன்னும் கண்டறியவில்லை. பேருந்து சுமார் 14-15 அடி மலைப்பகுதியில் விழுந்தது. மூணாறில் இருந்து வந்து கொண்டிருந்த பேருந்தின் டயர் வெடித்ததே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் தெரிவித்தனர். பேருந்து நடத்துனர் கூறுகையில், “விபத்து நடந்தவுடன், அப்பகுதி மக்கள் சிலர் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பலத்த மழை பெய்து கொண்டிருந்ததால் ஜன்னல் ஷட்டர்கள் தாழ்வாக இருந்ததால் வெளியே உள்ளவற்றை அதிகம் பார்க்க முடியவில்லை. எதிரே வந்த வாகனம் பேருந்து மீது மோதியதாக ஓட்டுனர் கூறினார்” என்றார். காயமடைந்த அனைவரும் எர்ணாகுளத்தில் உள்ள களமசேரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.