வேலூர் செப், 12
தமிழகம் முழுவதும் பல இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. வருகிற 30 ம் தேதி வரை பூஸ்டர் டோஸ் இலவசமாக போடப்படும் என ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்தார். தடுப்பூசி முகாம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தவும், தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்கும் வகையிலும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தடுப்பூசி போடுவதற்கு தகுதியான அனைவருக்கும் தடுப்பூசி போடும் வகையில் மெகா கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை ஒரு லட்சம் இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் 36-வது கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது. அரசு மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள், பேருந்து நிலையங்கள், உழவர்சந்தைகள், பஜார், ஆட்டோநிறுத்தம், பள்ளிகள், பெட்ரோல் பங்க் உள்ளிட்ட 788 இடங்களில் இந்த சிறப்பு முகாம் நடைபெற்றது. ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த முகாமை ஆட்சியர் குமாரவேல்பாண்டியன் பார்வையிட்டார். அப்போது மாநகராட்சி மேயர் சுஜாதா, சுகாதார பணிகள் துணை இயக்குனர் பானுமதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.