Spread the love

நெல்லை செப், 9

நெல்லை டவுனில் உள்ள மாநகராட்சி அலுவலகம் எதிரே உள்ள இடத்தில் ஆண்டுதோறும் அரசு சார்பில் பொருட்காட்சி அமைக்கப்படுவது வழக்கம். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அந்த இடத்தில் வணிக வளாகம் கட்டப்பட்டு வருவதால் பொருட்காட்சி நடத்த முடியாமல் போய்விட்டது. கொரோனா காரணமாகவும் கடந்த 2 ஆண்டுகளாக பொருட்காட்சி நடத்தப்படவில்லை.

இந்நிலையில் அரசின் திட்டங்களை கொண்டு சேர்க்கும் வகையில் நெல்லையில் இந்த ஆண்டு பொருட்காட்சி நடத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதன் அடிப்படையில் வ. உ. சி. மணிமண்டபம் பின்புறம் தனியாருக்கு சொந்தமான இடத்தை தேர்வு செய்து அங்கு பொருட்காட்சி அமைக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் ஆகியவை முடிவு செய்தது. இதையடுத்து அந்த இடத்தில் பொருட்காட்சி நடத்துவதற்கான பூமி பூஜை கடந்த ஜூலை 27 ம் தேதி நடத்தப்பட்டது. தொடர்ந்து அந்த இடத்தில் அரங்குகள் அமைக்கும் பணி தொடங்கியது.

மேலும் அரசின் வேளாண் துறை, வனத்துறை, காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சார்பிலும் அங்கு சுமார் 36 அரங்குகள் அமைக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு அரங்கிலும் அந்தந்த துறையின் சார்பில் இதுவரை நெல்லை மாவட்டத்தில் செய்யப்பட்டுள்ள பணிகள் சாதனைகள் உள்ளிட்டவை குறித்த விளக்கங்கள் காட் சிப்படுத்தப்பட்டிருக்கும்.
வேளாண்துறை அரங்கத்தில் நெல் விதைகள், உரங்கள், வேளாண் துறையால் நெல்லை மாவட்டத்திற்கு கிடைத்துள்ள பயன்கள் உள்ளிட்டவை இடம் பெற்றிருக்கும்.

இதே போல் அனைத்து துறையினரும் தங்களது துறையின் பணிகளை காட்சிபடுத்தியிருப்பார்கள். இது தவிர பொதுமக்கள் தங்களது பொழுதை போக்கும் வகையில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சிறுவர், சிறுமிகள் விளையாடி மகிழ ராட்டினங்கள், துரித உணவு கடைகள் உள்ளிட்ட பல்வேறு அரங்குகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வருகிற 16 அல்லது 18 ம்தேதிக்குள் பொருட்காட்சி திறக்கப்படலாம் என்றும், அதிகபட்சம் 45 நாட்கள் நடைபெறும் எனவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *