Spread the love

கன்னியாகுமரி செப், 8

இந்திய ஒற்றுமை பயணம் என்று பெயரிடப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தியின் பாத யாத்திரைப் பயணம் கன்னியாகுமரியில் நேற்று தொடங்கியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கதரால் ஆன தேசிய கொடியை காந்தி மண்டபம் முன்பு ராகுல் காந்தியிடம் வழங்கி பாத யாத்திரையை தொடங்கி வைத்தார். இன்று முதல் 10 ம்தேதிவரை குமரி மாவட்டத்தில் ராகுல்காந்தி பாத யாத்திரை மேற்கொள்கிறார்.

கன்னியாகுமரியில் தொடங்கும் இந்த பாதயாத்திரை மொத்தம் 150 நாட்கள் திருவனந்தபுரம், கொச்சி, நிலாம்பூர், மைசூர், பெல்லாரி, தெய்ச்சூர், விகாராபாத், நாந்தெட், இந்தூர், கோட்டா, தவுசா, ஆழ்வார், புலுந்த்ஷகர், டெல்லி, அம்பாலா, பதன் கோட், ஜம்மு வழியாக ஸ்ரீநகரை சென்றடைகிறது.

இந்நிலையில் தமது நடை பயணத்தின் போது இரவு ராகுல்காந்தி எங்கு ஓய்வு எடுப்பார் என்பது குறித்து காங்கிரஸ் கட்சி தெளிவுபடுத்தி உள்ளது. அதன்படி அவர் எந்த ஹோட்டலிலும் தங்க மாட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ராகுல்காந்தி இரவு வேளையில் தூங்குவதற்காக பாத யாத்திரை செல்லும் பல்வேறு மாநிலங்களில் நிலவும் தட்பவெட்ப நிலை மற்றும் சுற்றுச் சூழலுக்கு ஏற்ப 60 சிறப்பு கண்டெய்னர்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதில் படுக்கை வசதி, கழிப்பறை உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. இந்த கண்டெய்னர்கள் ராகுல்காந்தியின் நடைபயணம் மேற்கொள்ளும் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அடுத்த 150 நாட்களுக்கு இந்த கண்டெய்னர்களில் ராகுல்காந்தி இரவு நேரம் ஓய்வெடுப்பார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் தமது பயணத்தில் உடன் வருவோர் அனைவருடன் ஒரே நேரத்தில் ஒன்றாகவே சாப்பிட ராகுல் முடிவு செய்துள்ளதாகவும், நடைபயணம் முடியும் வரை ஆடம்பரம் இன்றி எளிய வாழக்கை முறையை கடைப்பிடிக்க அவர் திட்டமிட்டுள்ளதாகவும் தகவலகள் வெளியாகி உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *