நெல்லை செப், 6
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று வளர்ச்சி திட்டப்பணிகளை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.
அந்த வகையில் நெல்லை மாவட்டத்தில் நாளை மறுநாள் வளர்ச்சி திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார். இதற்காக அவர் விமானம் மூலம் நாளை தூத்துக்குடி வருகிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் கன்னியாகுமரிக்கு செல்லும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு ராகுல்காந்தி மேற்கொள்ளும் பாதயாத்திரையை தேசிய கொடி வழங்கி தொடங்கி வைக்கிறார். பின்னர் அங்கிருந்து நாளை மாலை நெல்லை வருகிறார்.
மேலும் முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் முதன்முறையாக மு.க.ஸ்டாலின் நெல்லை மாவட்டத்திற்கு வர உள்ளதையடுத்து அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க திமுக.வினர் திட்டமிட்டள்ளனர்.
ராதாபுரம் தொகுதி சார்பாக காவல் கிணறு விலக்கிலும், நாங்குநேரி தொகுதி சார்பாக நாங்குநேரி யூனியன் அலுவலகம் அருகிலும், அம்பை தொகுதி, பாளை ஒன்றியம் சார்பாக பொன்னாக்குடி விலக்கிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் தலைமையில் செய்யப்பட்டு வருகிறது.
இதேபோல் மாநகரில் மத்திய மாவட்ட திமுக.சார்பில் ஏராளமா னோர் திரண்டு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மத்திய மாவட்ட செயலாளர் சட்ட மன்ற உறுப்பினர் அப்துல் வகாப் செய்து வருகிறார். நாளை நெல்லை வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரவு தழையூத்து விருந்தினர் மாளிகையில் ஓய்வு எடுக்கிறார். நாளை மறுநாள் அரசு மருத்துவக்கல்லூரி மைதானத்தில் நடைபெறும் விழாவில் அவர் கலந்து கொள்கிறார்.
இவ்விழாவில் தமிழர்களின் பழம்பெருமைகளை பறைசாற்றும் வகையில் ரூ.5 கோடியில் அறிவிக்கப்பட்ட பொருநை அருங்காட்சியத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார். தொடர்ந்து பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்ட பாளை மேடை காவல் நிலையத்தையும் திறந்து வைக்கிறார்.
பின்னர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் முடிவுற்ற பணிகள், நெல்லை மாவட்டத்தில் நிறைவடைந்த பணிகளை திறந்து வைத்து, பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.பின்னர் சுமார் 30 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.330 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்குறார்.
இதற்கிடையே விழா நடைபெறும் மைதானத்தில் மேற்கூரை அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், மேடை அமைக்கும் பணிகள் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விழா மைதானத்தின் நுழைவு வாயில் முதல் நிகழ்ச்சி நடைபெறும் பகுதி வரை தார்சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
மைதானத்தில் முதலமைச்சர் விழாவை தெளிவாக காணும் வகையில் எல்.இ.டி திரைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பார்வையாளர்கள் பகுதியில் மின் விசிறிகள், அதிக வெளிச்சம் தரக்கூடிய மின் விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே மைதானத்தில் அமைக்கப் பட்டுள்ள குடிநீர் வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் மேடை அமைக்கம் பணிகள் குறித்து அமைச்சர் ராஜகண்ணபன் நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ, மாநகராட்சி ஆணையர் சிவகிருஷ்ணமூர்த்தி, திமுக. தலைமை செயற்குழு உறுப்பினர் வக்கீல் பிரபாகரன், நிர்வாகிகள் கணேஷ்குமார் ஆதித்தன், வக்கீல் செல்வசூடாமணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இன்று இரவு அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு விழா மைதானம் காவல் துறையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது. முதலமைச்சர் வருகையையொட்டி 3 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த உள்ளனர்.
நெல்லை மாவட்டத்திலிருந்து 2000 காவலர்களும், தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டத்தில் இருந்து ஆயிரம் காவலர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
இவ்விழா மைதானத்தில் இன்று வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் மூலம் சோதனை நடத்தினர். மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சட்டம், ஒழுங்கு கூடுதல் காவல் தலைமை இயக்குனர் தாமரைக்கண்ணன் நேரில் ஆய்வு செய்தார். அப்போது தென் மண்டல காவல் துறை தலைவர் ஆஸ்ராகர்க், நெல்லை சரக காவல் துறை துணை தலைவர் பிரவேஷ்குமார். மாநகர காவல் ஆணையர் அவினாஷ்குமார், துணை ஆணையர்கள் சீனிவாசன், அனிதா, சரவணகுமார் உள்ளிடட காவல் அதிகாரிகள் உடன் இருந்தனர்.