நெல்லை செப், 1
வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில் பேரிடர் காலங்களில் மக்கள் தங்களை காத்துக் கொள்வது குறித்து தமிழகம் முழுவதும் அரசு சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள், பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக நெல்லை மாவட்டத்தில் மழை வெள்ள காலங்களில் ஏற்படும் பேரிடரில் சிக்கித் தவிப்பவர்களை மீட்பது என்பது குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று நெல்லை வண்ணார்பேட்டை, வி.கே.புரம், முக்கூடல், களக்காடு, கூத்தங்குழி ஆகிய 5 இடங்களில் தீயணைப்பு துறை, வருவாய்த்துறை, காவல்துறை, மற்றும் பேரிடர் பயிற்சி பெற்றவர்கள், மாணவ-மாணவிகள், பொதுமக்களுடன் இணைந்து ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, தண்ணீரில் மூழ்கியவர்களை தீயணைப்புத்துறையினர் மீட்டு தத்ரூபமாக முதல் உதவி சிகிச்சை அளித்துக் காட்டினர். இதனைக் பார்வையிட்ட பொதுமக்களிடம் ஒவ்வொருவரும் கட்டாயம் நீச்சல் கற்றுக் கொள்ள வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தினர். தொடர்ந்து மீட்பு பணிக்கு தேவையான உபகரணங்களை பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தி விளக்கம் அளித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் செல்வன், மாவட்ட தீயணைப்பு அலுவலர் கணேசன், உதவி மாவட்ட அலுவலர் வெட்டும் பெருமாள், பாளை தீயணைப்பு நிலைய பொறுப்பாளர் பாலசுப்பிரமணியன், தேசிய பேரிடர் மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் ரவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.