நெல்லை செப், 1
நெல்லை வண்ணார்பேட்டை மேம்பாலத்தின் கீழ் பகுதியில் தற்காலிக பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மாநகர பகுதிகளுக்கு செல்வோர் மட்டுமின்றி மாவட்டங்களுக்குள் பல இடங்களுக்குள் செல்வோரும் வந்து செல்கின்றனர். இங்கு பயணிகளுக்கு தற்காலிக கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டிருந்தது. அவை முறையாக பராமரிக்கப்படாததாலும், கழிவு நீர் சாலையில் சென்றதாலும் செயலற்று காணப்பட்டது.
அதனை சீரமைக்க பல்வேறு தரப்பினரும் மாநகராட்சிக்கு கோரிக்கை வைத்தனர். இதைத்தொடர்ந்து தச்சநல்லூர் சுகாதார அலுவலர் இளங்கோ மேற்பார்வையில் 2 தற்காலிக கழிப்பறைகளும் சீரமைக்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு கழிவு நீர் செல்ல தனி ஓடையும் அமைக்கப்பட்டது. இதனிடையே கழிப்பிடம் தொடர்பாக குறைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்க அங்குள்ள ஒரு கடையில் மாநகராட்சி சார்பில் ஒரு நோட்டு வைக்கப்பட்டுள்ளது. அதில் பயணிகள் தங்களது புகார்களை தெரிவிக்கலாம். தினமும் மாநகராட்சி அலுவலர்கள் அதனை பார்வையிட்டு தேவையான நடவடிக்கைகளை எடுப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.