ஆக, 5
வாழ்க்கை என்பது அழகானது என்பதை விட மிகவும் ஆழமானது என்று கூறலாம். ஒரு குழியை ஆழமாகத் தோண்டத் தோண்ட பல மர்மங்களும் முடிச்சுக்களும் எவ்வாறு அவிழுமோ… அதேபோல் தான் வாழ்க்கையும். ஆழமாகப் பார்த்தோமானால் பல ஆச்சரியங்களையும் பிரம்மிப்புக்களையும் நமக்காக வைத்திருக்கும்.
பிறப்பிலிருந்து இறப்பு வரை இருக்கும் சிறு அத்தியாயமே நமது வாழ்க்கை. அதற்குள் இன்பம், துன்பம், வரவு, செலவு, பிரிவு, சண்டை, சமாதானம் என்று பலவற்றை கடந்திருப்போம். இதில் என்ன ஆச்சரியம் என்றால், எல்லோருக்கும் வாழ்க்கை ஒரே மாதிரியாக அமைந்துவிடுவதில்லை.
உதாரணத்துக்கு கூறப்போனால், நாம் அனைவரும் வாழ்க்கைப் பாடம் கற்க வந்த மாணவர்கள், நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வினாத்தாள்கள் ஒருவருடைய விடை இன்னொருவரின் கேள்விக்கு பொருத்தமாக இருக்காது.
ஆனால், நாம் அனைவரும் செய்யும் பெரும் தவறு என்னவென்றால், மற்றவர்களின் வாழ்க்கையைப் பார்த்து அவர்களைப் போல் வாழ முடியவில்லையே…என்று புலம்புவதுதான்.
வாழ்வில் வெற்றி பெறவேண்டும் என்னும் ஆசை இருந்தால் மட்டும் போதாது. அதற்கான முயற்சியும் இருக்க வேண்டும்.
பெரும்பாலும் நாம் விடும் தவறு என்னவென்றால் மற்றவர்கள் என்ன செய்கின்றார்கள் என்பதைப் பார்த்து பார்த்து நமக்கான நேரத்தையும் உழைப்பதற்கான வயதையும் விட்டுவிடுகின்றோம்.
இன்னும் ஒரு சிலருக்கு தான் செய்யும் அனைத்தும் தோல்வியில் வந்து விடிகின்றது…தன்னால் எதையும் செய்ய முடியாது. தனக்கு அந்தளவுக்கு திறமைகள் இல்லை என தன்னைத்தானே மட்டம்தட்டி ஒருவித தாழ்வு மனப்பான்மைக்குள் வாழ்வர்.
இவ்வாறான எண்ணங்கள் தோன்றுவதற்கு சுற்றியிருக்கும் சமூகமும் ஒரு காரணமாக இருக்கின்றது. அவர்கள் நமக்கு எதிர்மறையாக எதையேனும் கூறிவிட்டால் நாமும் அதற்குள் முடங்கிவிடுகின்றோம். அது மிகப்பெரும் தவறு. நம்மைப் பற்றி நம்மை விட அதிகமாகத் தெரிந்தவர் வேறு யாரும் இருக்க மாட்டார்கள்.
வாழ்க்கைப் பாதையில் நிச்சயம் பல்வேறு தடைக்கற்கள் இருக்கத்தான் போகிறது. அதை கடந்துவந்து நமக்கான இலட்சியத்தை எவ்வாறு அடைகின்றோம் என்பதில்தான் அனைத்தும் உள்ளடங்கியிருக்கிறது.
நேற்று உன்னால் முடியாது என்று கூறியவர்கள் நாளை ஒரு வழியாக சாதித்துவிட்டாயே என்று கூறுமளவுக்கு நமது வளர்ச்சியும் முன்னேற்றமும் இருக்க வேண்டும்.
வாழ்க்கையில் சாதித்து தனக்கான இடத்தை தக்கவைத்துள்ள அனைவருமே ஏதோ ஒரு விதத்தில் கஷ்டப்பட்டு, அவமானப்பட்டு உயரத்துக்கு சென்றவர்கள்தான்.
அவமானங்களை என்றுமே நம்மை உயரத்துக்கு கொண்டு சேரக்கும் கருவியாகப் பார்க்க வேண்டும்.
இன்று வளர்ந்து வரும் சமூகத்தினரில் பெரும்பாலானோர் தவறான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். வாழ்க்கைப் பயணம் முடியும் தறுவாயில் அவர்கள் திரும்பிப் பார்த்தார்கள் என்றால், அவர்கள் வாழ்வையே தொலைத்துவிட்டதை கண்டுகொள்வார்கள்.
எனவே எப்பொழுதுமே நிலை தடுமாறாமல் நிதானமாக இருக்க பழக வேண்டும். நம் வாழ்க்கை நம் கையில்தான் இருக்கின்றது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
வாழ்க்கை அனைவருக்குமே ஒரு தரம் கிடைத்த வாய்ப்பு தான். அதுவும் மிகப்பெரிய வாய்ப்பு. அந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்பவன் உச்சத்தை அடைகின்றான். அதில் பெரிதாக கவனமில்லாமல் இருப்பவன் எதுவும் மிச்சமில்லாமல் வீதியில் நிற்கின்றான்.
எனவே உச்சத்தை அடைவதும், மிச்சமில்லாமல் நிற்பதும் நம் கையில்தான் உள்ளது.
வாழ்க்கை என்றுமே சுவாரஸ்யமானது, அந்த சுவாரஸ்யத்தை எவ்வாறு அனுபவிக்கிறோம் என்பதில்தான் அனைத்தும் உள்ளது. எனவே வாழ்வை வாழ்வோம்…
வாழ்க்கையின் உண்மைத் தன்மையை உணர்த்தும் சில கவிதை வரிகள்…
எதிலும் அளவோடு இருந்தால் அவதிப்படவும் தேவையில்லை. அவமானப்படவும் தேவையில்லை!
நம்மை கெட்டவன் என்றும் சொல்லும் அளவுக்கு இங்கு எவரேனும் நல்லவர்கள் இருக்கிறார்களா என்ன?
அவமானமும் அனுபவமும்தான் வாழ்க்கையில் மிகச் சிறந்த ஆசான். அவை, கற்றுக் கொடுக்கும் போதனையை எந்த விலை உயர்ந்த புத்தகமும் கற்றுக் கொடுக்காது.
வாழ்க்கையில் அனைத்தையும் இழந்தவர்கள் வேதனைப்படத் தேவையில்லை. அனைத்தும் மீண்டும் கிடைக்கும் என்ற நம்பிக்கை மற்றும் துணிவுடன் போராடுங்கள். நிச்சயம் வெற்றி உங்களுக்கே…
வாழ்க்கையில் எதையாவது இழக்கும்போது எண்ணிக்கொள். வாழ்வில் நீ இழந்ததை விட சிறப்பான ஒன்றுக்காக வாழ்க்கை உன்னை தயார் செய்கிறது.
எந்த உறவுக்காகவும் மனைவியை விட்டுக் கொடுக்காதீர்கள். எல்லா உறவும் கைவிடும்போது கை கொடுக்கும் தேவதை அவள் மட்டுமே.
சிரிப்புக்கும் நிம்மதிக்கும் வேறுபாடு உண்டு. சிரிப்பதைப் போல நடிக்க முடியும். ஆனால், நிம்மதியாக இருப்பதுபோல் நடிக்க முடியாது.
புத்திசாலியாய் இரு. முட்டாளாய் நடி. வாழ்க்கையில் நிறைய கற்றுக் கொள்ளலாம்.
எதையும் பேசும் முன் கவனமாக பேசுங்கள். பேசிய பின் வருந்தி பயனில்லை.
இதுவும் கடந்து போகும்.