சென்னை ஆக, 28
தமிழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான பொது கலந்தாய்வு கலந்தாய்வுக்கான புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி கலந்தாய்வு செப்டம்பர் 10 ம் தேதி தொடங்கும் என அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 20 ம் தேதி தொடங்கியது. முதல் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெற்றது. பின்னர் ஆகஸ்ட் 25 ம் தேதி முதல் பொதுப்பிரிவு கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்படாததால், பொதுப்பிரிவு கலந்தாய்வு தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், நீட் தேர்வு முடிவுகள் செப்டம்பர் 7 ம் தேதி வெளியாகும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இதனையடுத்து பொறியியல் கலந்தாய்வுக்கான புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பொறியியல் மாணவர்களுக்கான பொது கலந்தாய்வு செப்டம்பர் 10 ம் தேதி முதல் நவம்பர் 13 ம் தேதி வரை நடைபெறும் என தெரிவித்துள்ளார்.