சென்னை ஆக, 28
உண்மையும், உழைப்பும், உறுதியான மனமும் இருந்தால், நிச்சயம் வாழ்க்கையில் உன்னத நிலையை அடைய முடியும் என்பதற்கான உதாரணம் தான் அப்பு சீனிவாசன். லண்டனில் உள்ள பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியின், ‘குராய்டன்’ பகுதியின் நகர் மன்ற தலைவராக, அங்குள்ள மக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ள அப்பு சீனிவாசன், சென்னை கே.கே.நகரில் பிறந்து வளர்ந்தவர்.
கடந்த 1990ல், பொறியியல் துறையில் மேற்படிப்பிற்காக லண்டன் பயணம் மேற்கொண்டவர், அங்கு படித்துக் கொண்டே வேலை பார்த்தார். படித்து முடிப்பதற்குள், பெரிய நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்தது. தன் அறிவாற்றலால் படிப்படியாக வளர்ந்து, அந்த நிறுவனத்தின் முதன்மை அதிகாரியானார்.
இதனைத் தொடர்ந்து, தன் தாய் சரோஜினியின் நினைவாக, ‘சாரா’ என்ற பெயரில் ‘சூப்பர் மார்க்கெட்’டை துவக்கினார். இப்படி படிப்படியாக முன்னேறி, லண்டனில் ஒரு முக்கியமான நபராக மாறினாலும், ஒவ்வொரு கட்டத்திலும் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களும், பிரச்னைகளும் மிக அதிகம். குராய்டன்’ என்ற தமிழ்ச் சங்கத்தை ஏற்படுத்தி, அந்த சங்கத்தின் வாயிலாக லண்டன் வரும் தமிழர்களுக்கும், வந்த தமிழர்களுக்கும் உதவி வருகிறார், அப்பு சீனிவாசன். அங்குள்ள தமிழர்கள் இவரை, அப்பண்ணன் என்று அன்புடன் அழைக்கின்றனர்.
கொரோனா காலத்தில் தனிமையில் தவித்த முதியோர்களுக்கு ஆதரவளித்தார். உணவு முதல் மருந்து, தடுப்பூசி வரை அனைவருக்கும் கிடைக்கச் செய்தார். இவரது செயல்பாடு, தொழிலாளர் கட்சியின் முக்கிய தலைவர் கீர் ஸ்டார்மரை பெரிதும் கவர்ந்தது. அதற்கேற்ப, அடுத்து வந்த அந்தப் பகுதிக்கான நகர் மன்ற தேர்தலில், தொழிலாளர் கட்சி சார்பில், அப்பு சீனிவாசன் நிறுத்தப்பட்டு, பெரும் வெற்றி பெற்றார்.
இந்நிலையில் வெற்றி பெற்ற அப்பண்ணன் தனது தாயாரை சந்தித்து ஆசி பெற, மனைவி கார்த்திகா, மகன் குரு கிருஷ்ணா ஆகியோருடன் சென்னை வந்த அவர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழர்கள் அதிகம் வாழும் முக்கிய நகரங்களில் லண்டனும் ஒன்று. இங்கு, சக தமிழர்கள் ஆதரவுடன் பல கோடி ரூபாய்க்கு தமிழ்ச் சங்க கட்டடம் கட்டப்பட்டுள்ளது. லண்டனில் பிறந்து வளரும் தமிழ்க் குழந்தைகளுக்கு, தமிழ் சொல்லிக் கொடுக்கிறோம். நம் தமிழ்ப் பற்றும், தாய் மண் பற்றும் குறைந்துவிடக் கூடாது என்பதற்காக, தமிழகத்தில் இருந்து மூத்த தமிழறிஞர்கள், தமிழ்க் கலைஞர்கள் பலரை அழைத்து, விழா நடத்தி வருகிறோம். வருங்காலத்தில் தமிழர்களுக்காக இன்னும் நிறைய திட்டங்கள் வைத்துள்ளோம் என பெருமிதத்துடன் கூறினார்.