புதுக்கோட்டை ஆக, 26
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பாப்பான்விடுதி யை சேர்ந்தவர் ரெங்கசாமி. இவர் பாச்சிக் கோட்டையில் இருந்து தனது லாரியில், தேங்காய் நார் ஏற்றிக்கொண்டு மறவம்பட்டியில் உள்ள மில்லில் இறக்குவதற்காக சென்று கொண்டிருந்தார்.
லாரி படேல் நகர் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது, அந்த வழியாக சென்ற மின் வயரில் தேங்காய் நார் உரசியது. இதில் தேங்காய் நார் தீப்பிடித்து எரிந்தது. சிறிது நேரத்தில் லாரியும் தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்த ஓட்டுநர் லாரியில் இருந்து கீழே குதித்து உயிர் தப்பினார்.
இதை பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக ஆலங்குடி தீயணைப்பு துறை, ஆலங்குடி காவல் துறை மற்றும் மின்சாரதுறைக்கும் தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணகுமார் தலைமையிலான வீரர்கள் தீயை போராடி அணைத்தனர். இருப்பினும் தேங்காய் நார் முற்றிலும் எரிந்து சாம்பலானது. லாரியின் சில பகுதியும் முற்றிலும் எரிந்து போயின. சேதாரமடைந்த லாரியின் மதிப்பு ரூ.4 லட்சம் என்றும் தேங்காய் நார் ரூ.1 லட்சம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து ஆலங்குடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.