நெல்லை ஆக, 26
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 25 ம்தேதி முதல் செப்டம்பர் 8 ம்தேதி வரை தேசிய கண்தான விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு இன்று முதல் வருகிற 8 ம்தேதி வரை 2 வாரங்கள் விழிப்புணர்வு வாரமாக அனுசரிக்கப்படுகிறது.
இதைத்தொடர்ந்து நெல்லை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் கல்வி நிறுவனங்கள் சார்பில் பொதுமக்களுக்கு கண்தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மனித சங்கிலி நெல்லை வண்ணார்பேட்டையில் நேற்று நடைபெற்றது.
அதனை நெல்லை கிழக்கு மண்டல காவல் துணை ஆணையர் சீனிவாசன் தொடங்கி வைத்து பேசினார். அப்போது போதை இல்லா நெல்லையை உருவாக்குவோம். போதை பொருட்கள் புழக்கம் குறித்து தகவல் தெரிந்தால் மாணவிகள் 100 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
மேலும் பேரணியில் நெல்லை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர். டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையின் மண்டல மருத்துவ இயக்குனர் லயனல்ராஜ் கண்தானம் செய்வதன் அவசியம் குறித்தும், உலக அளவில் கருவிழி பார்வை இழப்பு தடுப்பதை குறித்தும் விளக்கி பேசினார். மேலும் கல்லூரி மாணவிகள் சார்பில் கண்தானம் செய்வதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு படங்கள் வரைந்து காட்சிப்படுத்தினர்.