வால்பாறை பிப், 23
கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் தற்போது அதிகரித்து வருகிறது. மேலும் அவை அங்குள்ள ஆற்றங்கரையோரங்களில் கூட்டம், கூட்டமாக சுற்றும் திரிந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் நேற்று நள்ளிரவு நல்லகாத்து எஸ்டேட் பகுதிக்கு வந்தது. பின்னர் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அங்குள்ள நியாய விலை கடையை தாக்கி ஜன்னல் கதவு மற்றும் சுற்றுச்சூழல் உடைத்து சேதப்படுத்தியது. பின்னர் கடைகள் இருந்த அரிசி, பருப்பு, மற்றும் மளிகை பொருட்களை கூட்டம் கூட்டமாக தின்று சேதப்படுத்தியது.
உடனே இச்சம்பவம் குறித்து வனத்துறைக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்த காட்டு யானைகளை காட்டு பகுதிகள் விரட்டி அடித்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே குடியிருப்பு பகுதிக்குள் காட்டு யானை வராமல் தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.