புதுச்சேரி பிப், 10
புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய்விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி ரவிச்சந்திரன் தலைமையில் கடந்த 7-ம் தேதி நடத்தப்பட்ட சோதனையில் ‘பிங்க்’ நிறத்தில் விற்பனை செய்யப்படும் பஞ்சு மிட்டாயில் ‘ரோடமின்-பி’ என்ற ரசாயனம் கலப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து, விற்பனையில் ஈடுபட்ட வடஇந்தியர்கள் குறித்த தகவல்கள் திரட்டப்பட்டன.
புதுச்சேரிக்கு அதிகமானோர் சுற்றுலா வருகின்றனர். அவர்களின் குழந்தைகளைக் குறிவைத்து பஞ்சு மிட்டாய் விற்கப்படுகிறது. குறிப்பாக, கடற்கரைப் பகுதிகளில் பஞ்சு மிட்டாய் அதிக அளவில் விற்கப்பட்ட சூழலில், மக்களிடையே இந்த தகவல் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், புதுச்சேரி துணைநிலைஆளுநர் தமிழிசை வீடியோ பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: புதுச்சேரியில் குழந்தைகள் வாங்கி உண்ணும் நிறமேற்றப்பட்ட பஞ்சு மிட்டாயில், நச்சுப் பொருட்கள் கலந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. இந்த பஞ்சு மிட்டாயை வடஇந்தியாவில் இருந்து வந்த சிலர் விற்பனை செய்வது தெரியவந்தது.
அவர்கள் எங்கிருந்து வாங்கினார்கள் என்று விசாரித்தபோது, சில கடைகளை சுட்டிக் காட்டியுள்ளனர். அந்த கடைகளில் ரசாயனம் கலந்த பஞ்சு மிட்டாய் விற்கப்படுகிறதா என்று பரிசோதனை செய்யவும், யாரெல்லாம் இந்த பஞ்சு மிட்டாய்களை விற்கின்றனர் என்பதைக் கண்டுபிடித்து, அவற்றைப் பறிமுதல் செய்யவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், அடர் நிறமேற்றப்பட்ட பஞ்சு மிட்டாய் புதுச்சேரியில் விற்பனை செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. பஞ்சு மிட்டாய் வியாபாரிகள், உணவுப் பாதுகாப்பு தரச்சான்று பெற்று விற்பனை செய்ய வேண்டும். தரச்சான்று பெறாதவர்கள், உடனடியாக உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளை முறையாக அணுகி, தரச்சான்று பெற்று, பஞ்சுமிட்டாய் விற்பனையைத் தொடங்கலாம்.
அதுவரை பஞ்சு மிட்டாய் விற்பனை தடை செய்யப்படுகிறது. இந்த உத்தரவை மீறுவோர் மீது, விதிமுறைகளின்படி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்திலும் இதுபோன்ற சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு ஆளுநர் தமிழிசை அந்த வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கும் இதே போல் பஞ்சுமிட்டாய் விற்பனைக்கு தடை விதிக்கப்படுமா என்ற பொது மக்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்