ராமநாதபுரம் ஜன, 24
ராமநாதபுரம் மாவட்டம் T மாரியூரில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் அயோடின் உப்பின் அவசியம் குறித்த விழிப்புணர்வு, மற்றும் மாணவ மாணவிகளின் வீடுகளில் சமையலுக்கு பயன்படுத்தும் உப்பில் அயோடின் உள்ளதா என்பதை கண்டறிதல் நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றது.
தலைமை ஆசிரியர் சாரதா நிகழ்ச்சியை துவக்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார்.
வாலிநோக்கம் ஆரம்ப சுகாதார மையத்தின் மருத்துவர் சுகந்த், இணை இயக்குனர் (சுகாதார பணிகள்) நேர்முக உதவியாளர் ஷேக் அப்துல்லா, ராமநாதபுரம் நுகர்வோர் நல சங்க செயலாளர் லதா, கீழக்கரை நுகர்வோர் நலச்சங்க செயலாளர் செய்யது இப்ராஹிம், கடலாடி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பூமிநாதன் ஆகியோர் அயோடின் உப்பு குறித்த விழிப்புணர்வு உரையாற்றினர்.
நாம் வாங்கி பயன்படுத்தும் உப்பில் அயோடின் உள்ளதா என்பதை வீட்டிலேயே ஒரு சிறு பரிசோதனை செய்து நாம் தெரிந்து கொள்ளலாம் என்பதையும்,அயோடின் உப்பு குறித்த விழிப்புணர்வையும் செயல்முறை மூலமாகவும் மாணவர்களிடையே நிகழ்த்தி காட்டினர்.
ஒரு உருளைக் கிழங்கை தோலுடன் சிறு துண்டுகளாக நறுக்கி அதனை ஒரு டம்ளர் நீரில் 10 நிமிடம் கால் டம்ளர் நீராகும்வரை கொதிக்க வைத்து ஆறியவுடன் அதில் ஒரு ஸ்பூன் எடுத்து உப்பின் மீது விட வேண்டும். பின்னர் எலுமிச்சம் பல சாறு ஒரு சில சொட்டுக்கள் உப்பின் மீது உருளைக் கிழங்கு சாறு போட்ட அதே இடத்தில் போட வேண்டும். சில வினாடிகளில் உப்பு கருநீல நிறத்தில் மாறினால் அந்த உப்பில் அயோடின் உள்ளது, என நாம் அறிந்து கொள்ளலாம் எனக் குறிப்பிட்டனர்.
நிகழ்ச்சி முடிவில் பள்ளி அறிவியல் ஆசிரியர் வளர்மதி மாலை நன்றி கூறினார்.
ஜஹாங்கீர் அரூஸி
மாவட்ட நிருபர்//ராமநாதபுரம்