Spread the love

சென்னை ஜன, 20

தூர்தர்ஷன் பொதிகை இப்போது டிடி தமிழ் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கு புது லோகோவும் வெளியிடப்பட்டு உள்ளது.

மத்திய அரசின் பிரசார் பாரதியின் கீழ் இயங்கும் தூர்தர்ஷன் பொதிகை இயங்கி வந்தது. 1993 ஏப்ரல் 15ம் தேதி தூர்தர்ஷன் பொதிகை தனது ஒளிபரப்பைத் தொடங்கியது. அந்தக் காலகட்டத்தில் இதுபோல தனியார் டிவி சேனல்கள் இல்லை,

அப்போது தமிழகத்தில் ஒலிபரப்பான ஒரு தமிழ் சேனலாக தூர்தர்ஷன் பொதிகை இருந்தது. அப்போது வாரத்திற்கு ஒரு முறை ஒளிபரப்பாகும் ஒலியும் ஒளியும் நிகழ்ச்சியைத் தமிழ்நாடே காத்திருந்து பார்க்கும்.

தூர்தர்ஷன் பொதிகை: இப்போது தனியார் சேனல்கள், யூடியூப் இணையம் என்று பல பொழுதுபோக்கு அம்சங்கள் வந்துவிட்டன. ஆனால், இவை எதுவும் இல்லாத சமயத்தில் தூர்தர்ஷன் பொதிகை தமிழ்நாடு மக்களுக்கு முக்கியமான ஒன்றாக இருந்தது. இதற்கிடையே தூர்தர்ஷன் பொதிகை சேனல் இன்று புதுப்பொழிவுடன் மீண்டும் லான்ச் செய்யப்பட்டது. பிரதமர் மோடி இதனை லான்ச் செய்தார்.

புது டிவி தொடர்கள், புது நிகழ்ச்சிகள், புது வடிவில் செய்திகள் என முற்றிலும் புதுமையாக இருக்கும். மேலும், இதன் பெயரும் தூர்தர்ஷன் பொதிகை என்பதில் இருந்து டிடி தமிழ் என்று மாற்றப்பட்டு இருக்கிறது. பொதிகை என்ற பெயரில் ஒளிபரப்பு சேவையை வழங்கி வந்த டிவி சேனல் இனி டிடி தமிழ் என்ற பெயரில் தனது சேவையைத் தொடரும். இனிமேல், டிடி பொதிகை ஹெச்டி தரத்தில் ஒளிபரப்பாகும்.

இதில் பல படங்கள், நெடுந்தொடர்கள் இடம்பெற்று இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதற்காக பிரசார் பாரதி சார்பில் ரூ.39.71 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் தமிழகத்தில் நடைபெறும் நிலையில், இதன் தொடக்க விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்ட நிலையில், அதே நிகழ்வில் தான் பிரதமர் நரேந்திர மோடி டிடி தமிழ் சேனலை லான்ச் செய்தார். மேலும், டிடி தமிழ் லோகோவையும் அவர் அறிமுகம் செய்தார்.

இதற்கு முன்பு இருந்த பழைய லோகோ நீல நிறத்தில் இருக்கும். நீல நிறத்தில் தூர்தர்ஷன் லோகோ இருக்கும் நிலையில், மேலே தூர்தர்ஷன் என்றும் கீழே பொதிகை என்றும் வெள்ளை நிறத்தில் எழுதப்பட்டு இருக்கும். பின்னணியில் மட்டும் இந்த லோகோவில் காவி நிறம் இருக்கும். ஆனால், புது லோகோ முழுக்க முழுக்க காவி நிறத்தில் இருக்கிறது.

காவி நிறத்தில் லோகோ இருக்கும் நிலையில், அதன் மையத்தில் வெள்ளை நிறத்தில் தூர்தர்ஷன் என எழுதப்பட்டு இருக்கிறது. கீழே டிடி தமிழ் என்று எழுதப்பட்டு உள்ளது. இந்த புதிய லோகோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

லோகோ மட்டுமின்றி சேவையிலும் பல புதுமைகள் வர இருக்கிறது. வழக்கமான காலை 8 மணி செய்திகள் ஒளிபரப்பாகும் நிலையில், அதன் பிறகு காலை 9 மணி, 10 மணி, நண்பகல் 12 மணி, பிற்பகல் 2 மணி, 3 மணி, 4 மணிக்கு ஐந்து நிமிட விரைவு செய்திகள் ஒளிபரப்பாகும். மேலும், செய்திகளில் புது அம்சங்களும் இடம்பெற்றிருக்கும் எனக் கூறப்பட்டுள்ளன.

செய்திகளில் முக்கிய செய்திகள் மட்டுமன்றி, வல்லுநர்கள் கருத்துகளும் இடம்பெற்றிருக்கும். மேலும், வார நாட்களில் ஒரு மணிநேரம் நடக்கும் மக்கள் மேடை விவாத நிகழ்ச்சி, இனி மாலை 6 மணிக்கு ‘எதிரும் புதிரும்’ என்ற தலைப்பில் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *