நெல்லை ஆகஸ்ட், 23
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தால் ஏப்ரல் 2022ல் நடத்தப்பட்ட இளநிலை, முதுநிலை பாடப்பிரிவுகளுக்கான தேர்வு முடிவுகள் கடந்த 19 ம்தேதி வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகளை மாணவர்கள் தாங்கள் பயின்ற கல்லூரிகளிலோ அல்லது www.msuniv.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளத்திலோ அறிந்து கொள்ளலாம். இந்த தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களை மறுமதிப்பீடு செய்ய விருப்பமுடைய மாணவர்கள் அதற்குரிய படிவங்களை www.msuniv.ac.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மறுமதிப்பீடு செய்ய விரும்புபவர்கள் முதலில் விடைத்தாள் நகலைப் பெற்றுக்கொண்ட பின்னரே மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க முடியும்.
விடைத்தாள் நகலை இணையதளம் வழியாக பெற உரிய கட்டணத்துடன் படிவம் ஏ யை நாளை முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற 30 ம்தேதி ஆகும்.விடைத்தாள் நகல்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். அதன் பின்னர் மாணவர்கள் மறுமதிப்பீடு செய்ய விண்ணப்பிக்கலாம்.
மறு மதிப்பீடு செய்ய இணையதளம் மூலம் உரிய கட்டணம் செலுத்தி படிவம் பி யை அடுத்த மாதம் 9ம்தேதி முதல் விண்ணப்பிக்கலாம். மறு மதிப்பீடு செய்ய விண்ணப்பிக்க அடுத்த மாதம் 15 ம் தேதி கடைசி நாளாகும். இந்த தகவலை பல்கலைக்கழக பதிவாளர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.