நெல்லை ஆகஸ்ட், 22
நெல்லை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாநகர சைபர் கிரைம் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. ஆணையர் அவினாஷ் குமார் உத்தரவின் பேரில் துணை ஆய்வாளர்கள் சீனிவாசன், சரவணகுமார் மற்றும் அனிதா ஆகியோரின் மேற்பார்வையில் சைபர் கிரைம் தொடர்பான புகார் மனுக்கள் விசாரிக்கப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் மாநகர பகுதியில் திருட்டுப் போன செல்போன்கள் குறித்து ஆய்வாளர் சண்முகவடிவு, துணை ஆய்வாளர் நடராஜன், வித்யா லட்சுமி, கலை சந்தனமாரி, தொழில்நுட்ப துணை ஆய்வாளர் முத்துக்குமார் மற்றும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
இதில் சுமார் ரூ.25 லட்சத்து 2500 மதிப்பிலான திருட்டுப் போன 100 செல்போன்களை போலீசார் மீட்டு இன்று உரியவர்களிடம் ஒப்படைத்தனர். மேலும் இணையதளம் மூலமாக வேலை வாங்கி தருவதாகவும், பல்வேறு ஆப்கள் மூலம் ஓ.டி.பி. பெற்றுக் கொண்டு வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டதாக மோசடி செய்யப்பட்ட சுமார் 29 பேருடைய ரூ 34 லட்சத்து 92 ஆயிரத்து 133 ஐ மீட்டு ஒப்படைக்கும் நிகழ்ச்சியும் இன்று நடைபெற்றது.
இதில் காவல் ஆணையர் அவினாஷ்குமார் கலந்துகொண்டு உரியவர்களிடம் செல்போன் மற்றும் மீட்கப்பட்ட பணத்தினை வழங்கினார்.