சென்னை டிச, 7
மழை நின்ற பின்னரும் பல பகுதிகளில் வெள்ளநீர் வடியாமல் உள்ளது. வளசரவாக்கம், விருகம்பாக்கம், திருநகர், போரூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இன்னமும் வெள்ளநீர் வடியாமல் இருக்கின்றன. மழைநீருடன் கழிவுநீரும் கலந்துள்ளதால் துர்நாற்றம் வீசுவதாகவும், நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக அப்பகுதிவாசிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் ஆந்திராவை நோக்கி போன பின்னரும் அது ஏற்படுத்திய பாதிப்பு, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டிப்போட்டுள்ளது. வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றக்கூட முடியாமல் மக்கள் தவித்துப்போயுள்ளனர்.
சென்னையின் நகர்பகுதிகள் மட்டுமல்லாது போரூர், சின்னப்போரூர், வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகள் மிதக்கிறது. வீடுகளுக்குள் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தும் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன. போரூரில் இருந்து வளசரவாக்கம் வரை மழை நீர் ஆறாக ஓடுகிறது. தற்போது, வளசரவாக்கம், சின்னப்போரூர் பகுதிகள் தீவு போல காட்சி அளித்து வருகிறது.
வளசரவாக்கத்திலும், விருகம்பாக்கத்திலும் தேங்கிக் கிடக்கும் மழை நீரில் புழுக்கள் உற்பத்தியாகி கொசு தொல்லை அதிகரித்து வருவதாக கூறுகின்றனர் பாதிக்கப்பட்ட மக்கள். வளசரவாக்கம் ராதாநகர், லட்சுமி நகர் பகுதிகளில் கடந்த 3 நாள்களாக மழை நீர் வடியாததால் பொதுமக்கள் தொடர்ந்து சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளதால் இருளில் தவித்து வருகின்றனர் வளசரவாக்கம் பகுதி மக்கள்.
சாலையில் அதிகளவில் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சாலையோர கடைகளுக்கும் இந்த வெள்ளம் புகுந்துள்ளதால் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்ற மாநகராட்சி சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது இப்பகுதிவாசிகளின் குற்றச்சாட்டாகும்.