அக், 16
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்……
என்ற கவிஞர் வாலியின் பாடல் வரிகளுக்கேற்ப BSA என்ற மூன்றெழுத்தில் இன்றும் நம் எல்லோர் மனதிலும் நீங்காமல் வாழ்ந்துகொண்டிருக்கும் வள்ளல் சீதக்காதியின் வழிவந்த வள்ளல் பல குடும்பங்களுக்கு வாழ்வளித்த அவர்களின் வாழ்வை மேலோங்க செய்த மறைந்த நல்லுள்ளம் பி எஸ் அப்துர்ரஹ்மான் என்று சொன்னால் அது மிகையாகாது அவர்களின் பிறந்த தினம் அக்டோபர் 15.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் வள்ளல் சீதக்காதி குடும்பத்தைச் சேர்ந்த பிரபல முத்து வணிகர் புகாரி ஆலிம் தம்பதியினருக்கு பிறந்து பல வணிகர்களையும், நிறுவனர்களையும், முதலாளிகளை உருவாக்கிய உயர்ந்த நல்ல மனிதர், உழைக்கும் வர்க்கத்தோடு ஏற்றத்தாழ்வு, ஜாதி மத பேதமில்லாமல் பழகக்கூடியவர்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இ டி ஏ எனும் பெரும் நிறுவனத்தின் மூலம் லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு குறிப்பாக தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி அவர்களின் வாழ்வு நலம்பெற செய்தவர், இந்திய மற்றும் அயல்நாட்டு தலைவர்களோடு இணக்கமானவர், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கீழக்கரையில் முதல் மகளிர் கல்லூரியை உருவாக்கியவர், கல்விச்சாலைகளையும் தொழில் கூடங்களையும் உண்டாக்கியவர்,
இவர் பி. எஸ். அப்துர்ரஹ்மான் பல்கலைக்கழகம் நிறுவன வேந்தர், சீதக்காதி அறக்கட்டளை, அகில இந்திய இஸ்லாமிய நிறுவனம், கிரசன்ட் பள்ளி, கீழக்கரை தாஸிம் பீவி அப்துல் காதர் பெண்கள் கல்லூரி, சென்னை, மதுரை, நாகூர் ஆகிய இடங்களிலுள்ள கிரசன்ட் மெட்ரிக்குலேசன் பள்ளிகள், துபாயைத் தலைமையிடமாகக் கொண்ட ஈ.டி.ஏ.அஸ்கான், ஈ டி ஏ மெல்கோ, ஈடிஏ ஸ்டார் நிறுவனம், ஈ.சி.சி.ஐ., உள்ளிட்ட பல நிறுவனங்களை நடத்தி வந்ததுடன், யூசுப் சுலைஹா மருத்துவமனை, கிரசன்ட் மருத்துவமனைகளையும் நிறுவியவர்.
கீழக்கரையின் அன்பின் முகவரியாய் உலகெங்கும் வாழும் மக்களின் மனங்களில் என்றென்றும் நிலைத்து நிற்பவர் அவரே எங்கள் கல்வி தந்தை வள்ளல் பி. எஸ். அப்துர்ரஹ்மான்.
இந்நாளில் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி நினைவு கொள்வதில் பெருமிதம் கொள்கிறது நமது வணக்கம் பாரதம்24×7செய்திகள்.
M.நஜீம் மரைக்கா B.A.,
இணை ஆசிரியர்./ அமீரக செய்திப் பிரிவு. U.A.E.