சேலம் ஆகஸ்ட், 15
நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திரத்திற்கு பாடுபட்ட தலைவர்களின் வரலாற்றை நினைவுகூரும் வகையில் சுதந்திர தின அமுதப் பெருவிழாவாக மத்திய, மாநில அரசுகள் கொண்டாடி வருகிறது. இதையொட்டி நாடு முழுவதும் சுதந்திர போராட்டத்திற்காக உயிர்நீத்த தலைவர்கள், வீரர்களின் நினைவை போற்றும் வகையில் அவர்களுக்கு உரிய மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் 75வது சுதந்திர தினவிழாவை வரவேற்கும் விதமாக சேலம் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதற்காக 75 அடி நீளமுள்ள தேசிய கொடி தைத்து கொண்டு வரப்பட்டது. இதில், சேலம் மாவட்டத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகள் கலந்துகொண்டனர். அவர்களுக்கு சேலம் மாவட்ட சுதந்திர போராட்ட தியாகிகள் வாரிசுகளின் சங்கம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது