திருவாரூர் ஆகஸ்ட், 13
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் ஊராட்சி மன்ற தலைவர்கள் மட்டுமே தேசியக்கொடியை ஏற்ற வேண்டும் என ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அவர் கூறியிருப்பதாவது:
இந்திய நாட்டின் 75-வது சுதந்திர தின நாள் அமுத பெருவிழாவையொட்டி மத்திய மற்றும் மாநில அரசு உத்தரவுகளின்படி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வீடுகள் மற்றும் அரசு அலுவலகங்கள், கட்டிடங்களில் இன்று முதல் 15 ம் தேதி வரை தேசிய கொடியை ஏற்ற வேண்டும். வருகிற 15 ம் தேதி அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்களிலும் சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் மட்டுமே தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்த வேண்டும். அவர்களுக்கு பதிலாக வேறு எவரேனும் கொடியை ஏற்றுவதாக குழப்பம் விளைவித்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும் தேசிய கொடியை அவமதிப்பு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவித்துள்ளார்.