Spread the love

அரியலூர் பிப், 4

சென்னை கொளத்தூரைச் சேர்ந்தவர் மனோகரன். கடந்த 2012 ஆம் ஆண்டு இவர், வண்டலூர் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்க தனியார் கட்டுமான நிறுவனத்திடம் ரூ.6.44 லட்சம் முன்பணமும், தவணை முறையில் ரூ.22 லட்சமும் செலுத்தியுள்ளார். ஒப்பந்தப்படி 2014 நவம்பர் மாத இறுதியில் கட்டிமுடிக்கப்பட்ட வீடு மனோகரனுக்கு ஒப்படைக்க வேண்டும். ஆனால், வீட்டை கொடுக்காமல், மேலும் கூடுதலாக ரூ.2.60 லட்சம் செலுத்த வேண்டும் எனவும், கூடுதல் தொகை செலுத்த தவறினால் வாரம் ஒன்றுக்கு ரூ.25,000 அபராதமாக விதிக்கப்படும் எனவும் தனியார் கட்டுமான நிறுவனம் கூறியுள்ளது.

இதனால், அதிர்ச்சியடைந்த மனோகரன் கடந்த 2017 ஆம் ஆண்டு சென்னை தெற்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் கட்டுமான நிறுவனம் மீது வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு விசாரணைக்காக கடந்த ஆண்டு ஜூலை மாதம் அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்துக்கு மாற்றப்பட்டது. இதனிடையே, மனோகரன் இறந்து விட்டதால், அவரது மனைவி சுதா(45) வழக்கை தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிபதி வீ.ராமராஜ் தலைமையிலான அமர்வு, முழு தொகையை பெற்றுக்கொண்டு ஒப்பந்தத்தை விட கூடுதலாக பணம் கொடுத்தால் தான் வீட்டை தரமுடியும் என கட்டுமான நிறுவனம் வற்புறுத்தியது நியாயமற்ற வர்த்தக நடைமுறை. மேலும், வீடு வழங்க 8 ஆண்டுகள் காலதாமதம் செய்தது சேவை குறைபாடு. எனவே, தனியார் கட்டுமான நிறுவனம், 4 வாரத்துக்குள் சுதாவிடம் வீட்டையும், இழப்பீடாக ரூ.5 லட்சத்தையும் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *