அரியலூர் ஜன, 31
அரியலூர் கயர்லாபாத்திலுள்ள அரசு சிமென்ட் ஆலைக்கு சுண்ணாம்புக் கல் சுரங்கம் அமைப்பதற்காக செந்துறை அடுத்த ஆனந்தவாடி கிராம விவசாயிகள் தங்களது 161ஏக்கர் நிலத்தை குறைந்த விலையில் 1982 ம் ஆண்டு கொடுத்தனர். அப்போது அரசு சிமென்ட் ஆலை நிர்வாகம், நிலம் அளித்த விவசாயிகள் குடும்பத்தினர் ஒருவருக்கு சிமென்ட் ஆலையில் வேலை வழங்கப்படும் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ஆனால் இதுவரை அரசு சிமென்ட் ஆலை நிர்வாகம் அவர்களது குடும்பத்தினருக்கு வேலை வழங்கவில்லை. ஆனால் சிலருக்கு ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே பணி வழங்கப்பட்டுள்ளது. நிரந்தர பணிக் கேட்டு அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், வேறு ஒரு மாவட்டத்தில் வசித்து வரும் ஒருவருக்கு நிரந்தரப் பணியை வழங்கியுள்ளது அரசு சிமென்ட் ஆலை நிர்வாகம். இதனை கேள்விப்பட்ட ஆனந்தவாடி கிராம பொதுமக்கள், கயர்லாபாத்திலுள்ள அரசு சிமென்ட் ஆலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் போது, அரசு சிமென்ட் ஆலைக்கு நிலம் அளித்த விவசாயிகளுக்கு நிரந்தர பணி வழங்க வேண்டும். தற்போது ஒப்பந்த பணியில் உள்ளவர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். கன்னியாகுமரி மாவட்ட சேர்ந்தவருக்கு வழங்கப்பட்ட பணி நியமன ஆணையை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனர்.கிராம விவசாயிகளின் கோரிக்கையை அரசு சிமென்ட் ஆலை நிர்வாகம் ஏற்காத பட்சத்தில் கிராம பொதுமக்கள் சார்பில் சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.