நெல்லை ஆகஸ்ட், 12
நெல்லை மாவட்டம் அம்பை காவல்நிலையம் அருகே காவலர் குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு அம்பை காவல் சரகத்தில் பணியாற்றும் காவலர்கள் சுமார் 30 குடும்பங்கள் வசித்து வருகின்றன.
மேலும் குடியிருப்புக்கு அம்பை நகராட்சி சார்பாக குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் கடந்த 20 நாட்களாக காவலர் குடியிருப்பு குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் காவலரின் குடும்பத்தினர் கடும் அவதியடைந்தனர்.
இந்நிலையில் நகராட்சி பணியாளர் ஒருவருக்கு காவலர் அபராதம் விதித்ததால் காவல்துறையினரை பழிவாங்கும் நோக்குடன் நகராட்சி குடிநீர் இணைப்பை துண்டித்ததாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக நகராட்சி தலைவர் பிரபாகர பாண்டியன் தெரிவிக்கையில், காவலர் குடியிருப்புக்கு குடிநீர் இணைப்பில் அடைப்பு ஏற்பட்டு உள்ளதால் அங்கு குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது . மேலும் நான்கு இணைப்புகள் அனுமதியின்றி செயல்படுவதாகவும், சுமார் நாற்பத்தைந்தாயிரத்திற்கும் மேல் பாக்கி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்