Spread the love

சென்னை பிப், 1

இரு பெண்களின் கணீர் குரலில் ஐகிரி நந்தினி பக்தி பாடலை பலமுறை கேட்டிருப்பீர்கள். இந்த பாடலை கேட்கும் போதே நமது மனம் குளிர்ந்து இதயம் இறைவனின் பாதம் சேர்ந்துவிடும் அந்த பாடலை பாடியவர்கள் தான் பம்பாய் சகோதரிகள்.

பம்பாய் சகோதரிகள்’ என்று அழைக்கப்படும் சரோஜா, லலிதா ஆகியோரில் ஒருவரான லலிதா சந்திரன் நேற்று காலமானார்.

பம்பாய் சகோதரிகள் சரோஜா, லலிதா, கேரளாவின் திருச்சூரில் முக்தாம்பாள் – சிதம்பரம் ஐயர் ஆகியோருக்கு பிறந்தனர். சகோதரிகள் இருவரும் பம்பாயில் மாட்டுங்காவில் பள்ளிக்கல்வி பயின்று, டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்தனர். ஹெச்.ஏ.எஸ். மணி, முசிறி சுப்பிரமணிய ஐயர் மற்றும் டி.கே கோவிந்த ராவ் ஆகியோரிடம் கர்னாடக இசை பயின்றனர்.

பம்பாயில் இருந்து சென்னை வந்து இசை நிகழ்ச்சிகள் நடத்தியதில் இருந்து இவர்கள் இருவரும் ‘பம்பாய் சகோதரிகள்’ என்று அழைக்கப்பட்டனர். பல மொழிகளில் தங்கள் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வந்தனர்.

தங்களது இசைப் பணிக்காக மத்திய அரசின் பத்மஸ்ரீ, தமிழகஅரசின் கலைமாமணி, சென்னை மியூசிக் அகாடமியின் சங்கீத கலாநிதி விருதுகளைப் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் லலிதா சந்திரன் சென்னையில் நேற்று காலமானார். அவரது கணவர் உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரும், தமிழக அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞருமான என்.ஆர்.சந்திரன். ஆவார்.

லலிதா சந்திரனின் உடல் அடையாறு கற்பகம் கார்டனில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதிச் சடங்கு இன்று பிற்பகல் 2.30 மணியளவில் பெசன்ட் நகர் மின் மயானத்தில் நடைபெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *